மலைநாடான் பக்கங்கள்

 










இணைப்புக்கள்


> ETR வானொலி
> லங்காசிறி
> தமிழ்நாதம்
> தமிழ்மணம்
> பூங்கா
> தேன்கூடு
> வலைச்சரம்
> மாற்று


















































































































ஜெகத்

எனக்கு அறிமுகமானது மிக அண்மையில்தான். வலைப்பதிவுகளில் வாசித்ததன் மூலம் ஏற்பட்ட அறிமுகம்தான். ஒரு சில மின் மடல்களில் மட்டுமே எமது தொடர் வளர்ந்திருக்கிறது. அப்படி அதிகம் அறியப்படாத ஒரு நண்பரிடத்தில் இருந்து, என் எழுத்துக்கள் பற்றிய எண்ணப்பாட்டைக் கேட்டதும், எந்தவித மறுப்புமில்லாது, தன் கருத்துக்களை இங்கே குறித்துள்ளார்.


மிக்க நன்றி ஜெகத்.

- நட்புடன் மலைநாடான்
-------------------------------------------------

தோப்பிழந்தக் குயிலின் துயர் தெரிகிறது


மற்றவர் எழுத்தைக் குறித்துக் கருத்துக் கூறும் இடத்தில் கூட சுய புராணம் தேவையா என்று எழும் மனசாட்சியின் கேள்வியைத் தலையில் தட்டி அமர்த்திவிட்டுத் தொடங்குகிறேன்.

நான் ஒவ்வொரு முறையும் ஊருக்குப் பயணிக்கும் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்குவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் முன்னால் விமானி ஒரு அறிவிப்பு செய்வார்: "நாம் இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியின் மேல் பறந்துக் கொண்டிருக்கிறோம்". எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொண்டுப் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாகக் கீழே ஏதாவதுத் தெரிகிறதா என்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன். இரவு நேரம் என்பதால் கீழே ஒளியூட்டப்பட்ட வீதிகள் ஏதேனும் இருந்தால் அவை மட்டுமேத் தெரியும். நான் ஒருமுறைக் கூடப் போயிராத இந்த மண்ணின் மீது ஒருவித ஈர்ப்பு எனக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்துக்கும் ஈழத்துக்கும் மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதை நான் அறிந்திருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். மலைநாடானின் எழுத்துக்கள் - குறிப்பாக ஈழமக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் பற்றியச் சித்தரிப்புகள் - என் விருப்பத்திற்கு உரியதாக இருப்பதற்கும் இது ஒரு முக்கியக் காரணம் என்றுத் தோன்றுகிறது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இணையத்தில் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானாவர்கள் இனப்பிரச்சனையையும், போரையும், அரசியலையும் மட்டுமே - சில நேரங்களில் சலிப்பூட்டும் பிரச்சார நடையில் - எழுதுகிறார்கள். ஆனால் கால் நூற்றாண்டுக் காலப் போரின் காரணமாக உருமாறிவரும் ஈழத்தின் மரபு சார்ந்த வாழ்வுமுறையையும் பண்பாட்டு அம்சங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஒப்புநோக்க மிகக் குறைவாகவே உள்ளன. அந்த வகையில் மலைநாடானின் பங்களிப்பு எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.

பொதுவாக ஈழத்தமிழர்கள் தமிழ் திரைப்படங்கள் வாயிலாகவும், தமிழக நூல்கள் வாயிலாகவும் தமிழகத்தின் மொழி, பண்பாடு ஆகியவற்றைக் குறித்து நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனுடன் ஒப்புநோக்குகையில் தமிழ்நாட்டவர்க்கு ஈழமக்களின் வாழ்வியல், சமூக வரலாறு, மொழி ஆகியவற்றைப் பற்றிய அறிவு மிகக் குறைவானதே. அந்த வகையில் ஆயிரக்கணக்கானத் தமிழக இளைஞர்கள் புழங்கும் தமிழ் பதிவுலகில் ஈழத்தின் சமய மரபுகளையும், கொண்டாட்டங்களையும் மற்ற பண்பாட்டுக் கூறுகளையும் பதிவு செய்யும் மலைநாடானின் பணி வரவேற்கத்தக்கது.

ஈழத்தை இத்தகைய ஒரு கோணத்தில் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் மற்றொரு முக்கியமானப் பதிவரான மதி கந்தசாமியின் பதிவில் படிக்கக் கிடைத்த கவிஞர் சு. வில்வரத்தினத்தின் ஒருக் கவிதையின் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது: "தோப்பிழந்தக் குயிலின் துயர்". தன் சொந்த மண்ணைப் பற்றிய மலைநாடான் பதிவுகளிலும் தோப்பிழந்தக் குயிலின் துயர் தெரிகிறது. கூடவே என்றாவது ஒரு நாள் தோப்பில் நிம்மதியாக இளைப்பாறலாம் என்ற நம்பிக்கையும்.

பண்பாட்டுக் கோலம் என்றத் தலைப்பில் மலைநாடான் எழுதி வரும் கட்டுரைகள் சிறப்பானவை. முருகனைத் தங்கள் குலத்தின் மருமகனாகக் கருதி வேடுவர்கள் சீர் கொண்டு வரும் (வெருகல் ஒருபண்பாட்டுக் கோலம்) சடங்கைப் பற்றியும், கிருஸ்துவின் சிலுவைப்பாடு இத்தாலியர்கள் தத்ரூபமாக பண்டையச் சூழலில் நடத்திக்காட்டும் நிகழ்வைக் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த வகையைச் சார்ந்தவை. அடிப்படையில் இவ்விரண்டு நிகழ்வுகளும் உணர்த்துவது ஒன்றையே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நம்பப்படும் ஒரு நிகழ்வை நினைவுக்கூர்வதன் மூலம் தங்கள் மரபுடனானத் தொடர்பு அறுந்துவிடாமல் பாதுகாக்கும் சமூகங்களின் முயற்சியை சிறப்பாகச் சித்தரித்திருந்தார்.

நான் படித்தவரை மலைநாடானின் எழுத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடிய வரிகளைக் காண்பது அரிது. அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுபவர் என்பதை அவர் எழுத்திலிருந்துத் தெரிந்துக்கொள்ளலாம். ஆயினும், தன் கருத்துக்கள் ஒரு சாராருக்குப் பிடிக்காமல் போய்விடலாம் என்பதற்காக அரசியல் குறித்து எழுதுவதை முற்றாகத் தவிர்ப்பவர் அல்ல. மனித உரிமைகள், பன்மைத்தன்மை என்றுப் பலப்பல முகமூடிகள் அணிந்து வெளிப்படும் ஈழத்தமிழர் நலனுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு சிலநேரங்களில் அவர் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். கிழக்கு இலங்கையில் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பகைமை குறித்த பதிவில் அதிகம் அறியப்படாதப் பலத் தகவல்கள் இருந்தன. அகதி வாழ்வின் அவலத்தைச் சொல்லும் எத்தனையோ கட்டுரைகளைப் படித்திருந்தாலும் அவரது "என் தீவிருந்து புறப்பட்ட டைட்டடானிக்"" பதிவு மனதைப் பாதித்த அளவுக்கு பாதித்தவை மிகக் குறைவு.

மலைநாடான் கலைகளில் மிகுந்த ஆர்வமும் திறமையும் உடையவர் என்பதை அவரதுப் பதிவுகளிலிருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது. அதிகம் அறியப்படாத ஈழத்துக் கலைஞர்களையும் போற்றத்தக்க முறையில் வாழ்ந்த சாமானியர்களையும் தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதை அவர் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் அண்மையில் தொடங்கியிருக்கும் இணையத்தமிழைப் பற்றிய வானொலி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் பதிவுலகைக் குறித்து அறியாதத் தமிழர்களுக்கு அதை அறிமுகப்படுத்தும் நற்பணியைச் செய்து வருகிறார். மற்ற தெற்காசிய மொழிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் முன்னணியில் இருக்கும் தமிழ் பதிவுலகம் மேலும் வளர்ந்து ஒருத் தரமான மாற்று ஊடகமாக உருவாக இத்தகைய முயற்சிகள் வழிவகுக்கும்.

                                                                                                 
முகப்புக்குச் செல்ல..




2007. (c) All rights reserved.    │   முகப்பு   │   மின்னஞ்சல்:- malainaadaan@hotmail.com   │    வடிவமைப்பு:  கானம்