மலைநாடான் பக்கங்கள்

 










இணைப்புக்கள்


> ETR வானொலி
> லங்காசிறி
> தமிழ்நாதம்
> தமிழ்மணம்
> பூங்கா
> தேன்கூடு
> வலைச்சரம்
> மாற்று


















































































































ஏ.ஜி. யோகராஜா!

ஒரு பன்முகக் கலைஞர். நாடகம், எழுத்து, குறும்படம், என விரிந்து செல்லும் அவர் கலைப்பணிகள். சுவிற்சர்லாந்தில், நீண்ட காலமாக என்னை, என் செயற்பாடுகளை எட்ட நின்று பார்த்துவிட்டு, ஒருபொழுதில் கிட்ட வந்து உரையாடினார். அன்றிலிருந்து இன்றுவரை, என்னைப் சரிவரப் புரிந்துகொண்ட நண்பர்களில் அவரும் ஒருவர். அதன் பின் பல சமூக அக்கறைமிக்கப் பணிகளில் இணைந்துள்ளோம். இணையப்பரப்புக்கப்பால் இருந்து என், எழுத்துக்களை வாசிக்கும் வாசகனாய் கருத்துச் சொல்லக் கேட்டபோது, உதிர்த்தவைகள் இங்கே. மிக்க நன்றி யோகராஜா.


- நட்புடன் மலைநாடான்
-------------------------------------------------

குறிஞ்சி மலரை உறிஞ்சிய அளவில்


பெண்கள் தினத் திருநாளில் -மார்ச் 08ல்- இதழ் விரித்த மலை நாடானின் குறிஞ்சி மலர் (08. 03. 07)அன்று வயது 2ல் கால் பதிக்கிறது. வாழ்த்துவோம்! வரவேற்போம்!.
குறிஞ்சி மலரில்… சமூகம், சினிமா, செய்திவிமர்சனம், ஆன்மீகம் பண்பாட்டுக்கோலம், நட்சத்திரவாரம் என்று பலவித பிரிவுகளில் பவனி வருகிறார் மலைநாடான். இங்கு நான் உறிஞ்சியவற்றில் பல கடந்த காலங்களின் மீளுயிர்ப்புகளே! உடைந்து போன மனங்களுக்கும் உயிர் கொடுக்க விளைகிறார். ஆன்மிக அலசல்களும் வந்து போகின்றன. து}ரத்து நட்சத்திரங்களையும் பிரதிபலிக்கத் தவறவில்லை குறிஞ்சி மலர்.

ஈழத் தமிழரின் புலம் பெயர்ந்த வாழ்வுக்கு வயது சுமார் 20 பிளஸ். 20 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவலைகளை அதன் சுவை குன்றாமல் புதுமெருகுடன் மீள் பதிப்புச் செய்வதென்பது இலேசுப்பட்ட காரியமல்ல. எழுத்து என்பது கையினால் மட்டும் வடிவமைக்கும் விடயமும் அல்ல. இதயத்தின் ஊடாக உள்ளத்தில் ஊறிப் பிசவிக்கும் ஓவியத்திற்கு எந்தளவிலும் குறைந்ததுமல்ல. அந்த அளவில் ஒழுங்கு தவறாமல் நட்ச்சத்திரங்களைச் செதுக்கி இணையத்தளத்தில் உலாவ விட்ட மலைநாடானின் கடின உழைப்பை நானும் உணர்வேன். மலைநாடானின் எழுத்தில் " சொல் புதிது, பொருள் புதிது, சொல்லுந் திறன் புதிது" என்ற பாரதியின் கனவுகளுக்கும் குறைவில்லை.

ஆன்மீகத்திலும் ஆழமான புலமை மிக்கவர் மலைநாடான். மதங்களுக்கிடையிலான வேற்றுமைகளைக் கடந்த பல எழுத்துக்களின் தோற்றத்தையும் குறிஞ்சி மலரில் தரிசிக்க முடிகிறது. சமூகத்தின் முன்னேற்றத்திலும், சமூகத்தில் புரையோடிப் போன பல குறைபாடுகளைக் களைவதிலும் முன்னுதாரணிகளாகத் திகழ்ந்த பல பெரியோர்களின் அடிவருடியாக அல்லது அவர்களின் வாரிசுகளில் ஒருவராக திமிர்ந்த ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிக்கக்கூடியவர் மலைநாடான். இந் நிலையில் பெண்ணியம், தலித்தியம் ஆகியன தனித்திக் கூறுகளாக தலை விரித்திருக்கும் காலமிதில், தலித்தியம், பெண்ணியம் சார்ந்த சொற்களைப் பாவிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொள்கைளவில் எமது உள்ளம் வேற்றுமைகளைக் கடந்து நிற்க முனைப்பட்டாலும், நாம் வாழ்ந்த சூழலுக்குரிய ஆழ்மனப் பதிவுகள் சில ஆணுக்குரிய அல்லது ஆதிக்க சாதிக்குரிய குணாம்சங்களுடன் எம்மை அறியாமலே வெளிவந்துவிடுகின்றன. அல்லது நாம் வாழ்ந்த சமூகச் சூழலைப் பிரதிபலித்து விடுகின்றன. உதாரணத்திற்கு சமூகத்தில் உயர்சாதி, கீழ்சாதி ஆகிய பகுப்புக்கள் வெறும் கற்பிதங்களே! புதிலாக ஆதிக்க சாதி, தாழத்தப்பட்ட சாதி இல்லது அடிமைப்படுத்தப்பட்ட என்பவற்றை வரலாற்று நிஜங்களாகக் கொள்ளலாம். இவை சார்பாகவும் மலைநாடான் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

கந்ரோன் பாசலில் „வள்ளுவம்“ என்றோர் தமிழர் அமைப்பிருக்கிறது. கடந்த இணர்டு ஆணடுகளாக கிழமைக்கு ஒருசந்திப்பு என்ற வகையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் செயற்பாடு மாதத்திற்கு இருமுறை பத்துத் திருக்குறள்களை பொழிப்புரையுடனும், டொச் மொழி பெயர்ப்புடனும் வெளிக் கொணர்தல் ஆகும். பொழிப்புரை பரிமேழழகர் முதல் கலைஞர் கருணாநிதி வரை அறியப் பட்ட தமிழ் அறிஞர்கள் பலர் உடையவை என்பதில் ஐயமில்லை. டொச் மொழிபெயர்ப்பு ஊவே பைசேர்த் என்ற அறிஞருடையது. இதில் அடியேனின் சிறிய கருத்து என்னவெனில் டொச் மொழிபெயர்ப்பில் இருந்து தமிழுக்குப் பொழிப்புரை எழுதவேண்டும் என்பது. டொச் மொழி பெயர்ப்பில் இன்றைய, நாம் வாழும் சூழலுக்குரிய பல விடயங்கள் பதிவாகின்றன. இளந் தலைமுறையைக் கவரும் விடயங்கள் குழைந்திருப்பதும் கண்கூடு. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், மலை நாடானின் எழுத்துக்களில் வாழும் சூழலுக்குரிய மண் வாசனையை நுகர முடியவில்லையே என்று துழாவிய போது புலம் பெயர் சூழலின் பண்பாட்டுக் கோலம் ஒன்று கண்முன் வந்து நின்றது சிலுவைப் பாட்டு வடிவில். சுவிசில் ரெசின் மாநிலத்தில் வருடந்தோறும் நிகழும் பண்டைய வாழ்வின் பிசகிலா வடிவம் இது என்பதை உணர்த்தியது மலைநாடானின் விவரணம். இருந்தும் பண்பாடுகளைத் தனித்தனியாகச் சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் முந்தைய நினைவுகளோடு வாழும் சூழலுக்குரிய மண் வாசனையும் குழைத்தெடுக்க வேண்டும். அப்போதுதான் பத்தோடு பதினொன்று என்றில்லாமல் புத்தம் புது மணத்துடன், புலம் பெயர் இலக்கியம் என்பதற்கான அர்த்தத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தேவைப்படின் இதற்கு முன்னோடியாகத் திகழும் வகையில் புதிய கலை வடிவம் ஒன்றையும் மலைநாடான் பிரசவிக்க வேண்டும் என்ற எனது பேரவாவுடனும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுடனும்

ஏ. ஜி. யோகராஜா


















                                                                                                 
முகப்புக்குச் செல்ல..




2007. (c) All rights reserved.    │   முகப்பு   │   மின்னஞ்சல்:- malainaadaan@hotmail.com   │    வடிவமைப்பு:  கானம்