எனக்கு அறிமுகமானது, வலைப்பதிவுகளில் வாசித்ததன் மூலம் ஏற்பட்ட அறிமுகம்தான்.
ஒரு சில மின் மடல்களில் மட்டுமே எமது தொடர்பு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவர் எழுத்துக்கள் ஏதோ ஒரு
விதத்தில் நெருங்கத்தைத் தந்தன. அப்படியான ஒரு நண்பர், என் எழுத்துக்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என
எண்ணிக் கேட்டதும், மறுப்புமில்லாது, தன் கருத்துக்களை, தனக்கேயுரிய சுவாரசியத்துடன், இங்கே பதிந்துள்ளார்.
மிக்க நன்றி செல்வநாயகி!.
- நட்புடன் மலைநாடான்
-------------------------------------------------
மோர்விற்கும் கிழவி நீங்கள்!
ஒருநாள் என்பது காலை எழுந்தவுடன் பல்துலக்கித் துவங்குவதில் ஆரம்பித்து, இரவு படுக்கைக்குப் போகும் முன் சிறுநீர் கழித்துவிட்டுத் தூங்கப்போவதோடு முடிந்துவிடுவதில்லை. ஒருநாளை உண்மையாக வாழமுடிந்தால் அந்நாள் சிலபல கேள்விகளை விதைத்தும், புரிதல்களை ஏற்படுத்தியும் போகிறது. "என் வலைப்பதிவுக்கு வயது வரும் மார்ச்சோடு ஒன்றாகிறது, நீங்கள் என் எழுத்துக்கள் மீதான உங்கள் பார்வைகளை, எண்ணங்களை எனக்கு எழுதித்தரமுடியுமா?" எனக்கேட்டு மலைநாடானின் மின்னஞ்சல் வந்தநாளும் முதலில் எனக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தியது. அவை "வலைப்பதிவுலகில் இப்படியெல்லாம் எழுதிக்கொடுப்பதும், வாங்குவதும் தேவையா?" என்கிற முதல் கேள்வியில் ஆரம்பித்தது. பிறகு இதில் ஒன்றும் தவறில்லை என்கிற புரிதல் வந்தநிமிடத்தில் "கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், உங்கள் இடுகைகள் அனைத்தையும் படித்துமுடித்தபின் எழுதிவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன். ஆனால் இதில் முதல்கேள்விக்கும், கடைசியாக ஏற்பட்ட புரிதலுக்குமிடையில் தோன்றி மறைந்த எண்ணங்கள் ஏராளம்.
எனக்கு உள்நுழைந்த பொழுதிலிருந்து இன்றுவரை வலைப்பதிவுகள் என்பவை சுவாரசியமானவை. முக்கியமாய் இவை வெகுசன அச்சு ஊடகங்களுக்கு நேர் எதிரானவை. அங்கு சாதாரணமானவர்கள் நெருங்க முடியாத பீடங்கள் உண்டு. எழுத்துக்கள் வழங்கியிருக்கிற படைப்பாளிகளுக்கான பீடங்கள் அவை. ஒரு சினிமா நடிகருக்கும், அவரின் தீவிர ரசிகருக்கும் உள்ள கேள்விகளற்ற மூடப்பிணைப்புப் போல் சில வெகுசன எழுத்தாளர்களுக்கும் அவர்களின் வாசகர்களுக்கும் இடையேயும் வந்துவிடுகிறது. அப்படிப் பீடங்களுக்குப் போய்விட்டால் ஒரு சாமியாரின் அருள்வாக்குப்போல் அந்த எழுத்தாளர்களின் வாக்குகளுக்கும் புனிதத்தனமை கொடுக்கப்பட்டு அவை மட்டுமே பிறகு அசரீரியாக வெகுசனப் பத்திரிகைகளில் இடைவிடாது எதிரொலித்துக்
கொண்டிருக்கும். ஆனால் வலைப்பதிவுகள் அப்படியல்ல. இங்கே பீடங்களும், பீடக்கனவுகளும் செல்லுபடியாகாது. வெட்டப்பட்ட வாய்க்காலுக்குள் கட்டுப்பட்டு ஓடவேண்டிய நீராயின்றிப் பல திசைகளிலும் பாய்ந்துகொண்டிருக்கிறது இந்த ஊடகம். பதிவர், வாசகர் உறவு அருகருகானது. எனவே இங்கே ஒரு பதிவர் இன்னொரு பதிவரிடம் தன் எழுத்துக்கள் குறித்து எழுதி வாங்கிப்போடுவது விளம்பரவெளிச்சமாயின்றி எழுதித்தருபவருக்கும், பெற்றுக்கொள்பவருக்கும் ஒரு இனிய நினைவு என்ற அளவில் மட்டுமே
எடுத்துக்கொள்ளப்படும் எனக் கருதுகிறேன்.
பதிவராக இருப்பதைவிட வாசகியாய் இருப்பதே பெரும்பாலான நேரங்களில் என் விருப்பத் தேர்வு இங்கு. அப்படியொரு வாசகியாய் இவ்வலைப்பதிவுகளை 2005 இலிருந்து அவதானித்து வருவதில் இதன் ஆரம்பமும், போக்கும் வேறுபட்டிருக்கும் சில புள்ளிகளைக் காண்கிறேன். பதிவுகளின் எண்ணிக்கை சில நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்த பொழுதுகளில், ஆழ்ந்து சிந்தித்தும், அழகான மொழியிலும் எழுதப்படுகிற இடுகைகள் அதிகம் கவனம் பெற்றன. ஒருவருக்கொருவர் தெரியாததைத் தெரிந்துகொள்ளவும், தெரியப்படுத்தவும் மட்டுமே ஆர்வங்கள் அதிகமிருந்தன. அப்போது புதிதாக நுழைந்திருந்த எனக்கெல்லாம் எத்தனையோ அழகான ஆச்சரியங்களையும், புரிதல்களையும் ஏற்படுத்தியதில் அக்காலகட்டத்தில் பிற பதிவர்களின் பல இடுகைகளுக்கு நிறையப் பங்குண்டு. பிறகு வலையுலகம் பலதிசைகளிலும் கிளைகள் விரித்துப் பரவ ஆரம்பித்தபின் இதுவும் ஒரு சந்தைப்படுத்தல் நோக்கில் பயணிக்கத் துவங்கியது எனலாம். வானவேடிக்கைகளும், மக்களைப் படிக்க வரவைப்பதற்காகச் செய்யப்படும் வித்தைகளும், அப்படிக்கவர்வதே பிரதான நோக்கமாகவும் பலநேரங்களில் இருக்கிற இவ்வூடகத்தின் நிகழ்காலநிலையை முழுக்கக் குறைகூறிவிடவும் முடியாது. எதிலும் ஒரு தேக்கம் வரும்போது இன்னொரு நிலைநோக்கி எதுவும் நகர்ந்தே தீருமெனும் விதிப்படி நாளையே மீண்டுமொரு தபோவனக்குடிலாகலாம் இவ்வுலகம்:)) அப்படி ஒட்டுமொத்த மாற்றம் நிகழாவிடினும் அவரவர் விருப்பம், தேர்வுகள் சார்ந்து சிறுசிறு தீவுகளாகவும் சிதறிப்போகலாம்:))
அதேசமயம், இதன் நிகழ்காலச் சந்தை இரைச்சலிலும், கொக்கோகோலா, பெப்சி உத்திகளைத் தாண்டி ஓரமாக ஒரு மண்குடத்தில் இஞ்சி தட்டிப்போட்டு, கருவேப்பிலை கிள்ளிப்போட்டுக் கொஞ்சமாக உப்பும்
சேர்த்து வைத்துத் தன்னைத் தேடிவருபவர்களுக்கு வயிற்றைக்குளுமையாக்கும் மோர்விற்கும் கிழவிகளாகவும்
பதிவர்கள் உண்டு. இந்த மோர்குடித்தலின் சுகமறிந்தவர்கள் எல்லாம் தாண்டி இங்குவருவார்கள், வருகிறார்கள் என்பதும் ஆறுதல். அப்படியொரு மோர்விற்கும் கிழவியாக மலைநாடானும் அவரின் எழுத்துக்களும்.
பசியெடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும் என்கிற விரதம்போல் தேவைப்பட்டால், எழுத உண்மையிலேயே விடயம் இருந்தால் மட்டுமே எழுதவேண்டும் என்கிற கொள்கையை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன இவரின் இடுகைகள். இன்று எப்படியுமொரு பதிவு எழுதிவிடவேண்டுமென்கிற வெறியோ தவிப்போ இவரின்
எழுத்துக்களில் தெரிவதில்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை என தமிழ்நிலங்களின் பெயர்களை வைத்திருப்பதும், அவற்றிற்குப் பொருத்தமாக அந்தந்தப் பக்கங்களை அழகுபடுத்தியிருப்பதும் இவரின்
ரசனைக்குச் சாட்சிகள்.
தமிழுடனான தொடர்பை தன்னோடு நிறுத்திக்கொள்ளாமல் புலத்தின் வேறுபட்ட கலாசார, பண்பாட்டு சூழலில் வாழநேர்ந்திருக்கும் தம் வாரிசுகளுக்கும் நீட்டிக்கொடுக்கும் முயற்சியில் தம் மக்களின் படைப்பார்வத்தை ஊக்குவித்து அவற்றையும் ஒரு பக்கத்தில் இட்டுவருவது இவரின் இன்னொரு சிறப்பு.
அவ்வப்பொழுது கன்ணில் படுகிற இவரின் சில இடுகைகளை மட்டுமே இதுவரை வாசித்திருந்த நான் இதை எழுதுவதற்காக இரண்டுநாட்கள் உட்கார்ந்து எல்லா இடுகைகளையும் சமீபத்தில் படித்துமுடித்தேன். எனக்குப் பிடித்த இடுகைகள் என்று சிலவற்றைச் சொல்லலாமென நினைத்துத்தான் படித்தேன். ஆனால் முடியவில்லை.
பிடித்தது என்பதற்கும், பாதித்தது என்பதற்கும் நூலிழை அளவு வேறுபாடேனும் உள்ளதென நினைக்கிறேன். அந்த நூலிழை வேறுபாட்டையும் கணக்கிலெடுத்துச் சொன்னால் மலைநாடானின் பதிவு எனக்குப் பிடித்தது என்பதைவிட என்னைப் பாதித்தது என்றே சொல்வேன். காரணம், நீர்நிறைந்து நிற்குமொரு பெரும் ஏரியில்
சூரியஒளிக்குத் தகதகக்கிற மேலலைகள் தாண்டி உள்ளே ஒரு ஆழமௌனமும், அதில் ஆயிரம் கதைகளும்
அமிழ்ந்துகிடப்பதுபோல் இங்கு நான் விரும்பிப் படிக்கும் ஈழத்து நண்பர்களின் எழுத்துக்களின் ஆழத்தில் எப்போதும் ஒலிக்கும் ஒரு இனத்தின் சோகத்தை உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதப்படுகிற இடுகைகளில் சொல்ல ஏதுமற்ற குற்ற உணர்வுடன் திரும்பிவிடுகிறேன். ஆனால் அவ்வெழுத்துக்களின் நிழல்கள் கூடவே தொடர்பவையாய்.
மலைநாடான் இடுகைகளில் உள்ளே போய்க்கொண்டிருந்தபோது "என் தீவிருந்து புறப்பட்ட டைட்டடானிக்"" வருகிறது. இலங்கையிலிருந்து படகுமூலமாய்த் தமிழகம் வந்த அவர் உறவுக்காரர்களில் எதிர்பாராமல்
விபத்துநேர்ந்த படகிலிருந்து விழுந்து இறந்தவர்களில் ஒருத்தியாய் அவரின் சித்தப்பா மகளொருத்தி இருந்ததையும், "உடலங்களாய்க் கரைக்கு வந்த உறவுகளில் சிரித்தபடியே செத்துக்கிடந்தாள் சிகப்பி" என்று
அந்தச் சிறுமியைப் பற்றிய மலைநாடானின் குறிப்பையும் படித்த இடத்தில் சிதறும் மனதைச் சேர்த்தெடுத்து மற்ற இடுகைகளுக்குக் கொண்டுபோக முடியவில்லை.
சிரமப்பட்டு வாசிப்பை வேறு இடுகைகளுக்கு நகர்த்திக்கொண்டால் சம்பவங்கள் வேறானாலும் உண்மைகள் ஒன்றாகவே உள்ளன. " சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்" எனும் இடுகையில் ஒரு கலைஞன்
போராளி ஆன சம்பவம் பதியப்பட்டிருக்கிறது. சூரியன் துளைக்கமுடியாத கூரைக்கு அடியில், சொட்டுவியர்வையும் வீணாகிவிடாதபடிப் பஞ்சுமெத்தையில் உறங்கமுடிபவர்கள் தங்கள் இனத்தின்
விடுதலைக்காய்த் தவமிருப்பவர்களை அவர்களின் ஆயுதங்களை மட்டுமே அடையாளம்காட்டித் தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவது சுலபம். ஆனால் அப்படி ஆயுதம் தரிக்கும் ஒவ்வொரு மனிதனின் வரலாறையும் புரிந்துகொள்வது கடினம். அது பல வலிகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. கோவில்களில் உருக உருக
ஆண்டவனுக்கான பஜனைகளை அழுதழுது பாடிய நாச்சியார்கோவிலடி கண்ணன் எனும் கலைஞர் பின்னர் போராளியாய் மாறி விடுதலைக்கான பாடல்களைப் பாடுவது பற்றிய பதிவு அது.
" வெருகல ஒருபண்பாட்டுக் கோலம்" எனும் தலைப்பில் வெருகல் முருகனுக்கு வேட்டுவர் சீர்கொண்டுவந்து பூசை நடக்கும் திருவிழாவைச் சொல்லிக்கொண்டே வரும் மலைநாடான் அதே இடுகையில் இப்போது போர் மக்களைத் துரத்தியடித்ததில் திருவிழாவைத் தொலைத்த முருகனையும் காட்டுகிறார். சாமி இருக்கிறது நீதி
நிலைக்குமென்றால் போரிழைத்த அநீதியில் ஏன் சாமியும் அனாதையாகிப்போனதென்ற கேள்வி எழுகிறது அப்பதிவின் முடிவில்.
காலச்சுழற்சியில் தம் பயணத்தின் சுவடுகளைப் பதியவைப்பதாய் ஈழத்துவாழ்வில் தானும் ஒரு பயணியாய் நடக்கும் மலைநாடான் புதியன நாடும் ஆர்வத்திலும் வியக்கவைக்கிறார். ஒலி, ஒளித்துண்டுகள் மூலம்
நாட்டுப்புறப் பாடலிலிருந்து, எகிப்திய நடனம். வரை கொண்டுவந்து தரவும் தவறவில்லை.
"இணையத்தில் இன்பத்தமிழ்"எனும் வானொலிநிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குவதில் இங்கிருக்கும் தன் சகபதிவர்களைப் பதிவுலகம் தாண்டியும் பிறருக்கு அடையாளம் காட்டிவருவது பாராட்டுக்குரிய பணி. வலைப்பதிய வந்து
ஓரிடத்திலேயே தேங்கிவிடாமல் அடுத்தது நோக்கி நகரும் ஆர்வம் இவருக்கிருக்கிறது. அந்த நகர்தலையும் இங்கிருத்தலையும் ஒருசேரச் செய்யமுடிவதும் இவருக்குக் கைவருகிறது.
தமிழ்மணம், தேன்கூடு, இப்போது வந்திருக்கும் மாற்று போன்ற திரட்டிகளின் பணியால் வலைப்பதிவுகள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. எங்கும் தம் கருத்துக்களை எழுதாத, பதிவருமல்லாத ஒரு கணிசமான வாசகர் வட்டமும் இப்போது பெருகியிருக்கிறது. என்றாலும் உரையாடல்கள், விவாதங்களில் பங்குபெறுவதில் பதிவர்களே பெரும்பாலும் உள்ளோம். அவ்வகையில் பதிவர்கள் அவரவர் பதிவுகளில் இடுகைகள் எழுதுவதோடு நின்றுவிடுபவர்களாய் அன்றிப் பிற பதிவர்களுக்கு வாசகர்களாகவும் இருக்கிறோம். ஆதலால் ஒரு பதிவர் தன்
இடுகைகளில் மட்டுமின்றிப் பின்னூட்டங்களிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். அவசியமாயிருந்தும் நேரமின்மையால் எழுதப்படாத பின்னூட்டங்கள் இருப்பது போல், நேரமிருக்கிறது என்பதற்காக அவசியமில்லாதிருந்தும் எழுதிக்குவிக்கப்படும் பின்னூட்டங்களும் இங்கு அதிகம். நான் வாசித்தவரை இரண்டாவதுவகைப் பின்னூட்டங்களின் சொந்தக்காரர்களில் ஒருவராய் மலைநாடானை இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்காமலேயிருப்பேனாக:))
கடைசியாக ஒன்று சொல்லவேண்டுமென்றால் மறைந்த நண்பர் சாகரனுக்காக இவர் செய்த "சாகரசங்கமம்" அஞ்சலி ஒலிவடிவம். நெகிழவைத்த பதிவு அது.
எங்களோடு உங்களைப் பலவிதங்களில் இணைத்துக்கொண்டு அமைதியாகப் பல நல்ல விடயங்களை எழுதியும், நாங்கள் அறிந்திராத சிலதை அறியத்தந்தும் பதிந்துவருகிற மலைநாடான், உங்களுக்கு நன்றி. வலையுலகில் ஒரு ஆண்டை வெற்றிகரகமாக முடித்திருக்கும் உங்களை "சிங்கநடை போடுங்கள்! சிகரத்தில் ஏறி உட்காருங்கள்! அங்கேயும் போரடித்தால் வானத்தைத் தொடக் கிளம்புங்கள்! அதோடு விடக்கூடாது வானிற்கு அப்பாலும் போங்கள்!" என்றெல்லாம் வாழ்த்தாமல் "இப்படியே இருங்கள் இனிமேலும் ஒரு மோர் விற்கும் கிழவியாகவே!" என்று வாழ்த்தவே ஒரு வாசகியாக நான் ஆசைப்படுகிறேன்.